மகாளய அமாவாசையை முன்னிட்டு, வருகிற 13-ஆம் தேதி இராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்குச் சென்று தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவர்.
அதன்படி வருகிற 14-ஆம் தேதி மகாளய அமாவாசை அன்று, முன்னோருக்குப் பொதுமக்கள் தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவர். அவர்களுக்கு வசதியாக, வரும் 13-ஆம் தேதி சென்னை, சேலம், கோவை மற்றும் பெங்களூரில் இருந்து இராமேஸ்வரத்துக்குக் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம் மட்டுமின்றி பெங்களூரிலிருந்தும் பொதுமக்கள் மகாளய அமாவாசைக்குப் புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரத்துக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்கி வருவது வழக்கம். இதன்படி அக்டோபர் 14-ஆம் தேதி மகாளய அமாவாசை தினம் என்பதால், இராமேசுவரத்துக்கு அதிகளவில் மக்கள் பயணம் செய்வார்கள்.
எனவே, அக்டோபர் 13-ஆம் தேதி சென்னை, சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து இராமேஸ்வரத்துக்கும் அக்டோபர் 14-ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணம் மேற்கொள்ள விரும்பும் நபா்கள் www.tnstc.in மற்றும் tnstc official app செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.