குமரி மாவட்ட மாலைக்கோடு அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை – இலவச காலை உணவுக்கு கூட ஆசிரியை காசு வாங்கியதாக குற்றச்சாட்டி, பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
குமரி மாவட்டம் மேல்புறத்தை அடுத்த மாலைக்கோடு பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளன. 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த அரசு நடுநிலை பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியை – யை கண்டித்து மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக பணிபுரியும் பெல்லா பாய் – காலை உணவு திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து நூறு ரூபாய் வசூல் செய்வதாகவும் அதுபோல நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி பிரதிக்ஷா என்ற சிறுமியை – சக மாணவர்கள் முன்னிலையில் அணிந்திருந்த காலணியுடன் காலால் சிறுமியின் முழங்கால் பகுதியில் மிதித்ததாகவும் கூறப்படுகிறது.
மாணவி அழுது கொண்டு வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிக்க வந்தபோது அப்படி செய்யவில்லை என்று கூறிவிட்டு, வீட்டில் போய் ஏன் சொன்னாய் ? என்று கூறி மாணவியின் காதை காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதனால் குழந்தையின் பெற்றோர்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்கும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் மனு வழங்கி நீதிக்காக காத்திருந்தனர் .
இதனிடையே இப்பள்ளியில் இரண்டு அரசு ஆசிரியர்களும் ஒரு பி டி ஏ ஆசிரியரும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் பெல்லா பாய் இப்பள்ளியில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு பி டி ஏ ஆசிரியர் தான் காரணம் அவர்கள் தான் பெற்றோர்களுக்கு மனு வழங்க உதவி புரிகிறார்.
ஆகையால் பள்ளியை விட்டு நீக்குகிறேன் என்று கூறி பிடிஏ ஆசிரியரிடம் இனி நீங்கள் பள்ளிக்கூடம் வர வேண்டாம் என்று கூறி அனைத்து மாணவர்களையும் அழைத்து ஒரு வகுப்பு அறையில் வைத்து பாடம் நடத்தபட்டது.
தகவல் விரைவாக பெற்றோர்கள் மத்தியில் செல்ல, தங்கள் பிள்ளைகளுக்கு இப்பள்ளி பாதுகாப்பில்லை என்று கூறி, முதலில் நான்காம் வகுப்பு மாணவி பிரதிக்ஷாவின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளாக அழைத்து பள்ளியின் முன் பகுதியில் அமர்ந்து எங்கள் பிள்ளையை மிதித்த ஆசிரியரை பணி மாற்றம் செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்ததை தொடர்ந்து மற்ற பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.
பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து குழித்துறை வட்டார கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டடு இரு தரப்பினர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் அனைத்து பெற்றோர்களையும் வரும் 20ஆம் தேதி கூட்டி பிடிஏ கூட்டம் நடத்தப்படும், அதில் சுமூகமான முடிவெடுக்கப்படும் என்றும் தலைமை ஆசிரியராக இருக்கும் பெல்லா பாய் ஆசிரியரை மாற்றி மற்றொரு ஆசிரியரை நியமிப்பதாகவும் வட்டார கல்வி அலுவலர் உறுதி அளித்ததை தொடர்ந்து கூடியிருத்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.