இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில், உயிரிழந்த 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது.
இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்படாத போரில் ஈடுபட்டனர். வெறும் அரை மணி நேரத்தில் அந்நாட்டின் மீது 7,000 ஏவுகணைகளைச் செலுத்தினர். இத்தாக்குதலில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், பகிரங்கமாகப் போரை அறிவித்தது.
இதையடுத்து, காஸா மீது ஏவுகணை மற்றும் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், காஸாவின் வானுயர்ந்த கட்டிடங்கள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கியது. தொடர்ந்து, விமானங்கள் மூலம் காஸாவின் முக்கிய பகுதிகள் மீது, இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, காசா முனையைச் சுற்றி ஹமாஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 1,500 பேரின் உடல்கள் சிதறிக் கிடக்கிறது. காஸாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று இரவில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் யாரும் ஊடுருவவில்லை. ஆனால், இனிமேல், ஊடுருவல் நடக்க வாய்ப்பு உள்ளது. எல்லையை ஒட்டிய பகுதிகளில் வசித்து வந்த பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.