காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காவிரி நதிநீர் விவகாரத்தில், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், காவிரியிலிருந்து தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 -ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது.
ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராகக் கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. அப்போது, 12,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, அக்டோபர் 15 -ம் தேதி வரை தமிழகத்திற்குத் தினமும் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம் எனக் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 11 -ம் தேதியான இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனக் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், திரும்பிய திசை எல்லாம் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 35,000 -க்கும் மேற்பட்ட கடைகளும், தஞ்சாவூரில் சுமார் 10,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. நாகையில் 23,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த கடையடைப்பு போராட்டம் தமிழ்நாடு காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.