இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இதில், இதில், இரண்டு தரப்பிலும் 3,000 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் தீவிரவாதிகள் படை, மிகப்பெரிய தாக்குதல்களை இஸ்ரேல்மீது நடத்தியது.
அதாவது, அக்டோபர் 7-ம் தேதி அன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில், முதல் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலின் முக்கியப் பகுதிகளை ஹமாஸ் தீவிரவாத படை நிர்மூலமாக்கியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் காசா பகுதியை இஸ்ரேல் நிர்மூலமாக்கி வருகிறது. காசாவில் ஏராளமான கட்டிடங்கள், இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. மேலும், காசாவில் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை 3-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதி பிடனுடன் தொலைப்பேசியில் பேசினார். அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இஸ்ரேலுடன் அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என உறுதிப்படத் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாத படைக்கு எதிரான 5 நாட்கள் போரில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை IDF அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, 2,800 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். மேலும், 50 பேர் பணயக்கைதிகளாக உள்ளனர். மேலும், சிலர் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அரசு, இஸ்ரேலுக்கு போர் உபகரணங்களை வழங்கத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அமெரிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற முதல் விமானம் செவ்வாய்க்கிழமை மாலை தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விமானம் தாங்கி போர்க்கப்பல். கடற்படைக்கு தேவையான 5,000 மாலுமிகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.