ஸ்ரீநகரில் இன்று (அக்டோபர் 11, 2023) நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், காஷ்மீரின் பொறுப்புள்ள இளைஞர்களை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது என்று கூறினார் . காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் படிப்புடன் சமூக சேவையிலும் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதன் மூலம், அவர்கள் சமூக மாற்றத்தைக் கொண்டு வந்து ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்று கூறினார். முன்னாள் மாணவர்கள் நாட்டுக்கு சேவை செய்து இந்தப் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
‘இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்வோம்’ என்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் தாரக மந்திரத்தைக், நமது இளைஞர்கள் கல்வியின் ஒளியை நோக்கியும், அமைதியின் ஒளியை நோக்கியும் எவ்வளவு தூரம் முன்னேறுகிறார்களோ, அந்த அளவுக்கு நமது நாடு முன்னேறும் என்றார். வளர்ச்சி மற்றும் ஒழுக்கத்தின் பாதையைப் பின்பற்றும் சமூகமும் நாடும் முன்னேற்றம் மற்றும் செழிப்பின் பாதையில் முன்னேறும் என்று கூறினார்.
காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்களில் 55 சதவீதம் பேர் மாணவிகள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம்’ 2023 நமது நாட்டில் மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு புரட்சிகரமான படியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நீடித்த வளர்ச்சியின் படிப்பினைகள் காஷ்மீர் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றார். ‘காடுகள் இருக்கும் வரை மட்டுமே உணவு இருக்கும்’ என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்று குறிப்பிட்டார்.
இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காஷ்மீர் பல்கலைக்கழகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பனிப்பாறையியல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் இமயமலைப் பனி ஆய்வகம் தொடர்பான பணிகள் வெவ்வேறு கட்டங்களில் இருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதுபோன்று அனைத்து துறைகளிலும் பல்கலைக்கழகம் விரைவாக முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.