மத்திய தென் அமெரிக்காவில் காலநிலை மாற்றத்தால், குளிர்காலத்தின் முடிவில் வெப்பநிலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
WWA ஆல் நடத்தப்பட்ட ஆய்வில், தென் அமெரிக்காவில் வெப்ப அலைக்குக் காரணம் எல் நினோ என்று பலர் கூறினாலும், காலநிலை மாற்றம் வெப்பத்தின் முதன்மை காரணம் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது என்று பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் கூறினார்.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் குளிர்காலத்தின் உச்சத்தில், தெற்கு அரைக்கோளத்தில் வெப்பநிலை, 25 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. வெப்பமயமாதல் நிகழ்வுக்கு, இயற்கையாக நிகழும் எல் நினோ காரணமாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை 1.4 முதல் 4.3 டிகிரி வரை உயர்ந்து உள்ளது.
மத்திய பிரேசில், பொலிவியா மற்றும் அர்ஜென்டினா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பகுதியில், 12 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழு, வானிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தது.
தென் அமெரிக்காவில் கோடை காலத்திற்கு முன்னதாக, தீவிர வெப்பமயமாவதற்கு, மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம்தான் காரணம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளை விரைவாகக் குறைக்கப்படாவிட்டால், இது போன்ற காலநிலை மாற்றம் தீவிரமானதாக மாறும். வெப்பத்தால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கோடைக் காலத்தின் தொடக்கத்தில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உள்ள வெப்பநிலை, நம்பமுடியாத அளவிற்கு தீவிரமானதாக இருக்கும்.