சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின், ஒரு சில மாநிலங்களில் லாட்டரி தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் பல கோடி ரூபாய்களை குவித்து வருகிறார்.
இந்த நிலையில், லாட்டரி தொழிலில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில், கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவருக்கு சொந்தமாக மார்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல, சென்னை போயஸ் கார்டனில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததன் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன், மருமகன் ஆகிய மூன்று பேரின் அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகு அவருக்கு சொந்தமான 173 கோடி ரூபாய் மதிப்பிலான, சொத்துக்கள் அமலாக்கத்துறையால் ஏற்கனவே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.