சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், திமில் உருவம் கொண்ட காளையின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் மூலம், 16 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அகழாய்வில், தங்கத் தாலி, சுடு மண்ணால் ஆன பொம்மை, எடைகற்கள், கண்ணாடி மணிகள், ஏற்றுமதிக்குப் பயன்படுத்தக் கூடிய முத்திரைகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், யானைத்தந்தத்தால் ஆன பகடை, சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள், ஏராளமான மண் பானைகள், நாயக்கர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட செப்பு காசுகள், உட்பட 4,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அகழாய்வு பணியில், சுடு மண்ணால் செய்யப்பட்ட, திமில் உருவம் கொண்ட காளையின் சிற்பம் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முதல் கட்ட அகழாய்வில் திமிலுடைய காளை சிற்பம் கிடைத்தது. அக்கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள், இதனை வீர விளையாட்டு சின்னமாக பயன்படுத்தி இருக்கலாம் என அகழாய்வு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் இன்னும் ஒரு வாரம் மட்டுமே நடைபெற இருப்பதால், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருளை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.