” நான் ரெடி தான் வரவா ” பாட்டிற்க்கேற்ப முழுமையாக ரெடி ஆகி களமிறங்கவுள்ளார் சுப்மன் கில்.
உலகக்கோப்பைத் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்கள் அகமதாபாத் நகரத்திற்கு சென்றுவிட்டனர். அதேப்போல் இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தை அடைந்துவிட்டார்.
உலகக்கோப்பைத் தொடருக்கு முன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் சுப்மன் கில்லால் பங்கேற்க முடியவில்லை. இவருக்கு மாற்றாக இளம் வீரரான இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார்.
தற்போது அகமதாபாத்தை அடைந்துள்ள சுப்மன் கில், இன்று பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இருப்பினும் அவரின் உடல்நலத்தை பொறுத்தே பாகிஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் விளையாடினாலே விஸ்வரூபம் எடுக்கும் சுப்மன் கில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க வேண்டும் என்று இரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ஏனென்றால் நடப்பாண்டில் மட்டும் அகமதாபாத் மைதானத்தில் ஆடியப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்தை விளாசினார். அதேபோல் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் சுப்மன் கில்லுக்கு அகமதாபாத் மைதானம் மற்றும் சூழல்களை நன்கு அறிந்துவைத்துள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மட்டும் அகமதாபாத் மைதானத்தில் ஆடியப் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 404 ரன்களை குவித்துள்ளார் சுப்மன் கில். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் விளையாடும் அளவிற்கு உடல்தகுதி பெற வேண்டும் என்று இரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.