வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் அக்டோபர் 13 ஆம் தேதி 1936 ஆம் ஆண்டு ஹனுமானுலு என்கிற சிட்டி பாபு பிறந்தார். அவரின் பெற்றோர் அவரை செல்லமாக சிட்டி பாபு என்று அழைத்து வந்தனர் பின்னாளில் அதுவே நிலையாக நிலைத்தது.
இவர் 5 வயதில் வீணை வாசிக்க ஆரம்பித்தார். அப்போதே அப்பாவின் கவனக்குறைவான ஸ்ருதிகளைத் திருத்தி சரிசெய்து வந்த இவர் முதன்முதலாக 12 வயதில் கச்சேரி அரங்கேற்றம் நடத்தினார்.
மஹா மஹோபாத்யாய டாக்டர் இமானி சங்கர சாஸ்திரியை குருவாக கொண்டு வீணை வசித்து வந்த இவர், 1948-ல் ‘லைலா – மஜ்னு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பின்னர் 1974 ஆம் ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவின் ‘திக்கற்ற பார்வதி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவல் சினிமாவாக்கப்பட்டபோது அதற்கு இசை அமைத்தார். பாடல் இல்லாமல் பின்னணி இசையை மட்டும் கொண்ட அந்த படம் விருது பெற்றது.
பின்னர் தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் சிட்டி பாபுவின் வீணை இசை தனி முத்திரையைப் பதித்தது. வீணையில் அற்புதமான தொனியில் வெவ்வேறு ஒலிகளை எழும்பச் செய்து புதிய பாணியை படைத்தார். இனிமையான குரல் போன்ற ஒலியை வீணை மூலம் வெளிப்படுத்துவது அவரது தனித்த அடையாளம்.
மேலும் இவர் ‘‘என்னைப் பொறுத்தவரை ‘MUSIC’ என்பது இன்பமான விஷயம். அதில் ‘M’-யை நீக்கிவிட்டால் ‘U SICK’ (துன்பத்தில் நீங்கள்) என்று அடிக்கடி சொல்வார்.
இவர் இசையில் மட்டும் இல்லாமல் புத்தகம் படிப்பதிலும், கிரிக்கெட், டென்னிஸ், செஸ் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். தோற்றாலும் சரி, வென்றாலும் சரி இந்திய கிரிக்கெட் அணியை விட்டுக் கொடுக்கவே மாட்டார். ரஷ்ய செஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்சாண்டர் அலகெய்னின் தீவிர இரசிகராகவும் இருந்தார்.
தமிழகம், ஆந்திரம், மத்தியப் பிரதேச அரசுகள், திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பல அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஒருமுறை இவரது இசையில் மயங்கிய மைசூர் மகாராஜா உணர்ச்சிவசப்பட்டு, மேடையிலேயே தன் கழுத்தில் இருந்த தங்க மாலையை சிட்டிபாபுவுக்கு அணிவித்தார். உலகம் முழுவதும் சுற்றி பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர் சென்னையில் 1996-ல் காலமானார்.