உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடவுள்ளன.
இன்று நடைபெறும் 11 வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
நியூசிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், அடுத்த ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தையும் தோற்கடித்துள்ளது.
நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதமும், பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, பவுல்ட்டும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
ஐ.பி.எல். போட்டியின் தொடக்க நாளில் பீல்டிங் செய்த போது கால்முட்டியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை செய்து முழு உடல் தகுதியை எட்டி இருக்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கவுள்ளார். இதனை அவரே நேற்று உறுதிப்படுத்தினார். 7 மாதங்களுக்கு பிறகு அவர் விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
மேலும் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
இந்த அணியில் பேட்டிங்கில் லிட்டான் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், நஜ்முல் ஹூசைன் ஷன்டோவும், பந்து வீச்சில் ஷகிப் அல்-ஹசன், மஹிதி ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், ஷோரிபுல் இஸ்லாமும் நல்ல நிலையில் உள்ளனர்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 41 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் நியூசிலாந்து அணி 30 போட்டிகளிலும், வங்காளதேசம் அணி 10 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பைப் போட்டி தொடரில் வங்காளதேசத்துக்கு எதிராக 5 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் நியூசிலாந்தே வெற்றி வாகை சூடி இருக்கிறது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 74% நியூசிலாந்து வெற்றி பெரும் என்றும் 26 % வங்காளதேசம் வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிபட்டுள்ளது.