மைசூர் தசரா திருவிழாவை முன்னிட்டு, தசரா பொருட்காட்சி, உணவு திருவிழா, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலம் மைசூரில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, 10 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மைசூர் தசரா விழாவைக் காண்பதற்காக, பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். இதனால் 10 நாட்களும், மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா, வரும் 15-ஆம் தேதி தொடங்கி, 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தசரா பொருட்காட்சி, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பொருட்காட்சி தசரா தினத்தில் தொடங்கி 90 நாட்கள் நடைபெறும். தற்போது கடைகள் அமைக்கும் பணிகள், விளக்கு அலங்காரம் செய்வது, தற்காலிக கழிப்பறை அமைப்பது உட்பட பல்வேறு இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இங்கு ‘ஏ’ பிளாக்கில் அன்றாட தேவைக்கான பொருட்களும், ‘பி’ பிளாக்கில் அரசின் திட்டங்களை விவரிக்கும் கடைகளும், ‘சி’ பிளாக்கில் சிறுவர், சிறுமியர்களைக் கவரும் பூங்காவும் உள்ளது.
மேலும் ‘ஐ லவ் தசரா எக்ஸ்போ’ என்ற பெயரில், ‘செல்பி பாயின்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகளில் உணவு திருவிழாவும் ஒன்று. கர்நாடக உணவு வகைகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களின் உணவு வகைகளும், வெளிநாட்டு வெளிநாட்டு உணவு வகைகளும் கிடைக்கும். ஒரே இடத்தில் வாய்க்கு ருசியான உணவு வகைகள் கிடைப்பதால், ஆண்டுதோறும் உணவு பிரியர்கள் தவறாமல் வந்துவிடுவர்.
இத்திருவிழா வருகிற 15-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இங்கு 140 உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் தினமும் மாலை 6.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.