தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த அக்டோபர் 9 -ம் தேதி, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளையும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி, தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அம்மாநிலத்தில், காங்கிரஸ் – பி.ஆர்.எஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.
சட்ட மன்றத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், ஒய்.எஸ்.சர்மிளா, பி.ஆர்.எஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் காங்கிரஸிடமிருந்து கூட்டணி குறித்து முறையான அழைப்பு விடுக்கவில்லை. இதனால், தனித்து நின்று சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெலங்கானாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்கவே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயன்றோம். பிரிந்து போட்டியிட்டால் அது முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்குத்தான் லாபமாக அமையும். இது காங்கிரஸ் கட்சி உணர்ந்திருந்தும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. எனவே, தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.