மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உலகின் மிக சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் உள்ளது. இங்குள்ள புராதன சின்னங்களான ஐந்து இரதம், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை, அர்ச்சுனன் தபசு, பஞ்சபாண்டவர் மண்டபம் உள்ளிட்ட இடங்களைப் பார்க்க தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் புராதன சின்னங்களை மின்விளக்கு ஒளியில் இரசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அர்ச்சுனன் தபசு பகுதியைப் பார்க்கச் செல்லும் சுற்றுலா பயணிகள் அதன் அருகே உள்ள பஞ்சபாண்டவர் மண்டபத்தையும் இரசிப்பது வழக்கம். பஞ்சபாண்டவர் மண்டபத்தின் மேல்பகுதி வலுவிழந்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே மண்டபத்தின் மேற்பகுதியில் அவ்வப்போது இரசாயன சிமெண்ட் கலவை வைத்துப் பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது விரிசல் அதிகமாகி மண்டபத்தின் உள்ளே மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை வரும் போது சுற்றுலாப் பயணிகள் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஒதுங்கி நிற்பர். அப்போது அவர்கள் மீது மழை நீர் கொட்டுவதோடு, தரையில் நீர்பட்டு வழுக்கி விழும் நிலையும் உள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொல்லியல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும், சிலர் இணையதளம் வழியாக டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் தலைமை அலுவலகத்திற்குப் புகார் அனுப்பினர்.\
இதன் பின், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள மத்திய தொல்லியல்துறையைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் பழங்கால கட்டிட கட்டமைப்பு பாதுகாப்பு பொறியாளர் பஞ்சபாண்டவர் மண்டபத்தில் ஆய்வு செய்தனர். மண்டபத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டுள்ள விரிசலின் அளவு, கல்லின் தன்மை, உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.