2023-ம் ஆண்டுக்கான நாட்டின் பணக்காரர்கள் பட்டியலை ஹுருன் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில் நாட்டின் 138 நகரங்களைச் சேர்ந்த 1,319 பணக்காரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. இதில் 52 ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் அடக்கம் என்பதுதான் ஹைலைட்!
ஹுருன் இந்தியா மற்றும் 360 ஒன் வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, நாட்டின் பணக்காரர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, கடந்த 11 ஆண்டுகளாக பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 12-வது ஆண்டாக இந்த ஆண்டும் கணக்கெடுப்பை நடத்தி, ‘360 ஒன் வெல்த் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2023’ என்கிற பெயரில் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இப்பட்டியலில் நாட்டின் 138 நகரங்களைச் சேர்ந்த 1,319 பணக்காரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இப்பட்டியலில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியை பின்னுக்குத் தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 150 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலுள்ள மற்ற நிறுவனங்களை விட அதிகம். 2014-ம் ஆண்டில் 1,65,100 கோடி ரூபாயாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, ஆகஸ்ட் 2023-ம் ஆணடுக்குள் சுமார் 8,08,700 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதாவது, 4 மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் முகேஷ் அம்பானியின் நெட்வொர்த் 2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
அதேசமயம், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 57% குறைந்திருக்கிறது. இதனால் அவர் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். கௌதம் அதானி நெட்வொர்த் 4,74,800 கோடி ரூபாயாகும். இதற்கு ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவாக அதானி குழும நிறுவனப் பங்குகளின் மதிப்பு சரிந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக, இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் சைரஸ் எஸ்.பூனாவாலா, 2,78,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3-வது பணக்காரராக இருக்கிறார்.
மேலும், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில், ஹெச்.சி.எல். ஷிவ் நாடார் 2,28,900 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4-வது இடத்திலும், கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் குடும்பத்தினர் 1,76,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 5-வது இடத்திலும், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் மற்றும் தலைவரான திலீப் ஷங்வி 1,64,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6-வது இடத்திலும் உள்ளனர். 1,62,300 கோடி ரூபாய் சொத்துக்களுடன் எல்.என்.மிட்டல் 7-வது இடத்திலும், ராதாகிஷன் தமானி 1,43,900 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 8-வது இடத்திலும் உள்ளனர். குமார் மங்கலம் பிர்லா & குடும்பம் 1,25,600 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 9-வது இடத்திலும், நீரஜ் பஜாஜ் & குடும்பத்தினர் 1,20,700 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட 1,319 பேரில் 52 பேர் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் கடந்த ஓராண்டில் 11 புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இப்பட்டியலின்படி, ரியல் எஸ்டேட் துறையின் ஒருங்கிணைந்த மதிப்பு 27 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பட்டியலைப் பொறுத்தவரை, டி.எல்.எஃப்.-ன் ராஜீவ் சிங் மற்றும் அவரது குடும்பம் 78,900 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
அடுத்ததாக, மங்கள் பிரபாத் லோதா மற்றும் மேக்ரோடெக் டெவலப்பர்களின் குடும்பம் 52,800 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 2-வது இடத்திலும், கே ரஹேஜா கார்ப் நிறுவனத்தைச் சேர்ந்த சந்துரு ரஹேஜா குடும்பம் 45,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3-வது இடத்திலும் உள்ளன. பில்லியனர்கள் பட்டியலில் நிதித் தலைநகரான மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்நகரில் 328 பில்லியனர்கள் வசிக்கின்றனர். டெல்லியில் 199 கோடீஸ்வரர்களும், பெங்களூருவில் 100 கோடீஸ்வரர்களும் வசித்து வருகின்றனர்.
இப்பட்டியல் குறித்து 360 ஒன் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான யதின் ஷா கூறுகையில், “இந்த 1,319 பேரிடம் தலா 1,000 கோடி ரூபாய் சொத்துகள் இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இவர்களின் சொத்து மதிப்பு 76 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு 3 வாரங்களுக்கும் 2 புதிய கோடீஸ்வரர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது நாட்டில் 259 பில்லியனர்கள் உள்ளனர். இந்த வருடத்தில் 51 பேரின் சொத்து இரட்டிப்பாகி இருக்கிறது” என்று தெரிவித்தார்.