ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் நடந்த புலிகள் வேட்டையில், பவாரியா கொள்ளையர்களின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வனத் துறை தெரிவித்துள்ளது.
வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், விசாரணைக்கு வந்தன.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சத்தியமங்கலத்தில் ஐந்து புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்றார்.
இதையடுத்து, ” புலிகள் வேட்டையின் பின்னணியில் யார் இருக்கின்றனர், புலித் தோல், பல், நகம், யாருக்கு விற்கப்பட்டன, இதில் சர்வதேச தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்ததா? ” என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு, சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
புலிகள் வேட்டையில் வட மாநில பவாரியா கொள்ளையர் தொடர்பு இருப்பதாகவும், முக்கிய குற்றவாளியை, மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளதாகவும், சத்தியமங்கலத்தில் நடந்த புலிகள் வேட்டையில், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.