தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று இரவு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி இன்று காலை 11 மணிக்கு காளி பூஜை நடைபெறவுள்ளது.
இன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கிவிட்டனர். இன்று மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நாளை அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறும். கொடி ஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று தசரா திருவிழா தொடங்கும்.
திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளிஅருள் வழங்குகிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
கோவிலில் தினசரி காலை மற்றும் மதிய நேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.
24 ஆம் தேதி 10-ம் திருநாள் அன்று தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை பக்தர்கள் கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள், 24 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி மற்றும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள்.
அங்கு மகிஷாசுரசம்காரம் முடிந்த பின்னர் அம்மன் கடற்கரை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில், முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பின்பு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் பவனி சென்று மாலையில் கோவிலுக்கு வந்ததும், முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்த்து பின்பு பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். நள்ளிர்ரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.
மறுநாள் 12-ம் திருநாள் அன்று பகல் 12 மணிக்கு பால் அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.