தமிழகத்தில் பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக பிறந்த சிறுவர் தான் இன்று இந்திய ஏவுகணையின் நாயகனாக உள்ளார், ஆம் அவர் தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை 13 விருதுகளுக்கும் மேல் பெற்று விருதுகளின் நாயகனாக திகழ்கிறார்.
மேலும் இவர் யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பதிவிட்டு தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை எடுத்துரைத்தவர்.
இவரை போற்றாத மனிதர் இல்லை! அவரது பொதுமை வார்த்தைகளை கேட்காத குழந்தை இல்லை. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்று இதயமொழி கூறிய இந்தியாவின் ஏவுகணை நாயகன், அணு ஆயுதங்கள், ராக்கெட்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான எடை குறைந்த செயற்கை கால்கள் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டெண்ட் கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறப்புற செயலாற்றிய இவர் அக்னி சிறகுகள் எனும் தமது சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார்.
வறுமைப்படிகளைத் தாண்டி வரலாறு படைத்த, ராமேஸ்வரத்தில் பிறந்து, ராக்கெட்டுகளை வடிவமைத்த ரட்சகன் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தப் போதே மயங்கி விழுந்து மறைந்தார்.