ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து 3 மற்றும் 4-ம் கட்டமாக மேலும் 471 இந்தியர்கள் தாயகம் திரும்பி இருக்கிறார்கள். இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.
இதையடுத்து, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்கிற திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் முக்கிய நகரான டெல் அவிவுக்கு விமானங்களை அனுப்பியது. வெள்ளிக்கிழமை தேசியத் தலைநகர் டெல்லியை வந்தடைந்த முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து சனிக்கிழமை காலை வந்த 2-வது விமானத்தில் 235 பேர் வந்தனர்.
தொடர்ந்து, நேற்று மாலை வந்த 3-வது விமானத்தில் 197 பேர் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியை வந்தடைந்த 4-வது விமானத்தில் 274 பேர் வருகை தந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேல் நாட்டில் மொத்தம் 18,000 இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காகச் சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் இந்தியா திரும்ப விரும்புபவர்கள் மற்றும் தயாராக இருப்பவர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் தனி விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.