கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடியக் கனமழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் உள்ள முக்கிய அருவியான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் 4-வது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் தொடங்கிய கனமழை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆறு, கோதை ஆறு, பழைய ஆறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணையில் 167 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. சிற்றாறு 1 மற்றும் 2 அணைகளிலிருந்து 1,700 கன அடி தண்ணீர் உபரிநீராகத் திறந்து விடப்படுகிறது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சுப்பாரை அணையின் நீர்மட்டம் 37 அடியாகவும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 65 35 அடியாகவும் உள்ளது.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியின் அனைத்து பகுதிகளை மூழ்கடித்த தண்ணீர் செல்கிறது. குறிப்பாக, அருவியின் கீழ்ப் பகுதியில் உள்ள கல்பண்டபத்தையும், பாதியளவு மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.