இஸ்ரேல் மீது கொலைகார ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கடற்படைப் பிரிவின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொலைகாரத் தாக்குதல் நடத்திய காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. முதலில் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த இஸ்ரேல் இராணுவம் தற்போது தரைவழித் தாக்குதலையும் நடத்தி வருகிறது. எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகளும், டாங்கிகளும் காஸாவை நோக்கி குண்டுகளை வீசி வருகின்றன. மேலும், காஸா நகருக்குள் ஊடுருவிய இஸ்ரேல் தரைப்படை வீரர்களும், ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து சுட்டுக் கொல்வதோடு, பலரையும் கைது செய்திருக்கிறார்கள்.
இஸ்ரேலின் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஏற்கெனவே, விமானப்படைத் தலைவர் முராத் அபு முராத் கொல்லப்பட்டார். தொடர்ந்து, மற்றொரு ட்ரோன் தாக்குதலில் முக்கிய கமாண்டோ பிரிவான நுக்பா பிரிவின் தளபதி அலி காடி கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் இஸ்ரேல் விமானப்படையின் குண்டு வீச்சில் தூள் தூளானது. அதேபோல, முக்கியத் தலைவர் ஒருவரின் வீடு, மசூதியில் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம் ஆகியவற்றையும் இஸ்ரேல் விமானப்படை தரைமட்டமாக்கியது.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் விமானப்படையின் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கடற்படைப் பிரிவின் முக்கியத் தளபதி பிலால் அல் கெத்ரா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இவர்தான் ஹமாஸ் தீவிரவாதிகளின் கொலைகாரத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய மூத்த தளபதி என்றும், நுக்பா பிரிவின் தெற்கு கான் யூனிஸ் பட்டாலியனின் நாகாபா படைப் பிரிவுக்கு தலைமை வகித்தவர் என்றும், இஸ்ரேலின் தெற்கு பகுதிகளான நிரிம் மற்றும் நிர் ஓஸ் மீது தாக்குதல் நடத்தியவர் என்றும் கூறியிருக்கிறது.
இதுதவிர, காஸா பகுதியில் நேற்று இரவு முழுவதும் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தீவிரவாதிகளின் கட்டளை மையங்கள், இராணுவ வளாகங்கள், டஜன் கணக்கான ராக்கெட் ஏவுகணைகள், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்காணிப்பு நிலைகள் உட்பட 100-க்கணக்கான இலக்குகளையும் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனம், இராணுவ புலனாய்வு இயக்குனரகத்தின் உளவுப்பிரிவு ஆகியவை காஸா நகருக்குள் ஊசடுருவி இருக்கிறது. இவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை அழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.