உத்தரப் பிரதேசம், அயோத்தியில் மிகப் பிரம்மாண்ட வகையில் ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராமர் கோவில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், 5 கோபுரங்கள், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.
கோவில் கட்டுமானப் பணிக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களில் பொது மக்கள் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர்.
கோவில் கட்டுமானத்தை ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடி அலுவலகத்தில் பணியாற்றிய நிருபேந்திர மிஸ்ரா, கட்டுமான பணிக்குழு தலைவராக உள்ளார். இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோவில் திறப்பு விழா செய்யப்பட் உள்ளது.
இதனால், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 -ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை, ராமர் கோவிலில் பல்வேறு முக்கிய யாகங்கள் நடைபெறுகிறது. இதற்காக, தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள், ஆதினங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைவருக்கும் முறையாக கடிதம் அனுப்பட்டுள்ளது.
மேலும், விரைவில் தமிழகம் வரும் நிருபேந்திர மிஸ்ரா, மடாதிபதிகள், ஆதினங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுக்க உள்ளார். இதனால், நாடாளுமன்ற திறப்பு விழாவைப் போன்றே, ராமர் கோயில் திறப்பு விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், ஆதினங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.