இஸ்ரோ தனது லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விமானத்தை அக்டோபர் 21-ம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவ திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமும் தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுத்திருக்கிறது. இத்திட்டத்தின் முக்கியப் பகுதியாக வரும் அக்டோபர் 21-ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ககன்யான் சோதனை விமானத்தை விண்ணில் செலுத்த முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “ககன்யான் முதல்கட்ட சோதனைக்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் 21-ம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானம் விண்வெளியில் செலுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ கடந்த 2007-ம் ஆண்டு 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கியது. இத்திட்டத்துக்கு கடந்த 2014-ல் ககன்யான் என்று பெயரிடப்பட்டது. இதன் பிறகு, ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியிலிருந்து 400 கி.மீ. தொலைவு சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 பேர் கொண்ட விண்வெளி வீரர் குழுவினரை அனுப்பி 1 முதல் 3 நாட்கள் வரையிலான ஆய்வுக்குப் பிறகு பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
இந்த சோதனை வாகனம் என்பது ககன்யான் மிஷனுக்காக உருவாக்கப்பட்ட ஒற்றை நிலை திரவ ராக்கெட்டாகும். இதன் பேலோடுகளில் க்ரூ மாட்யூல் மற்றும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம்ஸ் ஆகியவை அடங்கும். இச்சோதனையானது ககன்யான் திட்டத்துக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும். மேலும், இந்த சோதனை விமானத்தின் வெற்றி, மீதமுள்ள தகுதிச் சோதனைகள் மற்றும் ஆளில்லா பயணங்களுக்கு களம் அமைக்கும். இது இந்திய விண்வெளி வீரர்களுடன் முதல் ககன்யான் பயணத்திற்கு வழிவகுக்கும்.
இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Mission Gaganyaan:
The TV-D1 test flight is scheduled for
🗓️October 21, 2023
🕛between 7 am and 9 am
🚩from SDSC-SHAR, Sriharikota #Gaganyaan pic.twitter.com/7NbMC4YdYD— ISRO (@isro) October 16, 2023
















