நவராத்திரி திருவிழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கொலு வைக்கப்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த வருடம் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் 30 அடி நீளம், 21 படிகள் கொண்ட பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. சிறியது முதல் பெரியது வரை உள்ள சுமார் 4 ஆயிரம் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இந்த பொம்மைகளை பார்க்கும் பார்வையாளர்கள் பிரமித்துப்போகிறார்கள்.
குறிப்பாக, கொலுவில், துர்க்காதேவி, சிதம்பரம் நடராஜர், விநாயகர், ராமர், லட்சுமணன், சீதா தேவி, அனுமன், சிவன், பார்வதி, நந்தி தேவர், சரஸ்வதி, மகாலட்சுமி, தேச மகான்கள் விவேகானந்தர் உள்ளிட்ட பொம்மைகள் என சுமார் நான்கு ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. பிரம்மாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.
ஒன்பது நாட்களும் இரவு 9 மணிக்குக் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.
ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரிணாம வளர்ச்சிகளை விளக்கும் வகையில் சிதம்பரம் கோவிலில் கொலு வைத்து வணங்கப்படுகிறது என திருக்கோவில் தீட்சித்தர் தெரிவிக்கின்றனர்.