ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்றையப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இன்று போட்டி தரம்சாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா அணி முதல்ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 428 ரன்களை குவித்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த இரு ஆட்டங்களிலும் அந்த அணி சார்பில் 4 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இலங்கை அணிக்கு எதிராக குயிண்டன் டி காக், ராஸி வான் டெர் டஸ்ஸன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் குயிண்டன் டி காக் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றி சதம் அடித்திருந்தார்.
தெம்பா பவுமா, ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் முதல் இரு ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். காகிசோ ரபாடா, மார்கோ யான்சன், லுங்கி நிகிடி, ஜெரால்டு கோட்ஸி ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணி நெதர்லாந்து அணிக்கு கடும் சவால்தரக்கூடும். சுழற்பந்து வீச்சில் கேசவ் மகாராஜ் அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து கிரிக்கெட் அணியானது முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து இருந்தது. முதல் ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்திடமும், 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் வீழ்ந்திருந்தது. வலுவான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இன்றைய ஆட்டமும் நெதர்லாந்துக்கு சோதனையாக இருக்கக்கூடும்.
இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளுக்கு அவ்வவ்போது நெதர்லாந்து சவால் அளித்துள்ளது. 2009-ம் ஆண்டு டி 20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிக்காவை வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றி இருந்தது.
இந்த வெற்றிகளை 50 ஓவர் வடிவிலான ஆட்டத்திலும் பிரதிபலிக்கச் செய்ய நெதர்லாந்து அணி வீரர்கள் முயற்சி செய்யக்கூடும். ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் தென் ஆப்பிரிக்காவும், அந்தஅணிக்கு எதிராக முதல் வெற்றியை பெறும் தீவிரத்தில் நெதர்லாந்தும் களமிறங்குவதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் தென் ஆப்பிரிக்கா அணி 93% வெற்றி பெரும் என்றும் நெதர்லாந்து அணி 7% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.