ஐப்பசி மாத பூஜைக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்தின் துவக்க நாளில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஐந்து நாட்கள் மட்டுமே கோயில் திறக்கப்பட்டு, பிறகு நடை அடைக்கப்படுகிறது.
இதேபோல் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
நாளை முதல் தினமும் கணபதிஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை கோயில் இன்று நடை திறக்கப்படும் நிலையில் ஏராளமான பக்தர்கள் பம்பையில் குவிந்து வருகின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். இதனிடையே சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்தி தேர்வு நாளை(18-ந்தேதி) நடைபெறுகிறது.