அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (ஏப்ரல் 17) இஸ்ரேல் செல்ல உள்ள நிலையில், சுமார் 2000 துருப்புகள் தயார் நிலையில் உள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹாமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 199 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டிற்கு நாளை செல்கிறார்.
இந்நிலையில், அமெரிக்க துருப்புகள் 2000 பேர் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
மருத்துவ உதவி மற்றும் வெடிபொருள்களை கையாளுதல் உள்ளிட்ட பணிகளை அந்த குழு கையாளும் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு பிரிவுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு, மத்திய கிழக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்கள், தேவைப்பட்டால் இஸ்ரேலிய படைகளுக்கு உதவ தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கூடுதல் படைகளை களம் இறக்குவது தொடர்பாக தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என லாயிட் ஆஸ்டின் கூறினார். ஏற்கனவே அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை அப்பகுதியில் நிறுத்தியுள்ளதாக லாயிட் ஆஸ்டின் கடந்த வாரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.