காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் ஏராளமான ஏவுகணைகள் மூலம் ஹாமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சுமார் 200 பேரை பணய கைதிகளாக ஹாமாஸ் இயக்கத்தினர் பிடித்து சென்றனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா நகரத்தில் உள்ள பல மருத்துவமனைகள் நூற்றுக்கணக்கான மக்களுக்கு புகலிடங்களாக மாறியுள்ளன, இந்நிலையில், அல்-அஹ்லி மருத்துவமனை மீது நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தபோது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 பேர் பலியானார்கள்.
மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப்படை, காசா மருத்துவமனை மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை என கூறியுள்ளது.
காசாவில் செயல்பட்டுவரும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ஏவிய எறிகணையே காசா மருத்துவமனை மீது விழுந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு அருகே இருந்து இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பால் வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேல் நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதில் ஒன்று தவறுதலாக காசா மருத்துவமனை மீது விழுந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.