லடாக்கில் உள்ள 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் இருந்து, ஹரியானாவில் உள்ள கைதாலுக்கு சூரிய சக்தியை கொண்டு செல்வதற்காக 20,773.70 கோடி ரூபாயில் டிரான்ஸ்மிஷன் லைன் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடந்த சுதந்திர தின உரையின்போது, லடாக்கில் 7.5 ஜிகாவாட் சோலார் பார்க் அமைப்பதாக அறிவித்தார். அதன்படி, விரிவான கள ஆய்வுக்குப் பிறகு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திறனையும், 12 ஜிகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பையும் லடாக் யூனியன் பிரதேசமான பாங்கில் அமைக்கும் திட்டத்தைத் தயாரித்திருக்கிறது.
இங்கு தயாரிக்கப்படும் மிகப்பெரிய அளவிலான மின்சாரத்தை, இதர மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். இந்த சூழலில், லடாக்கில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான பசுமை எரிசக்தி காரிடார் 2-வது கட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “இத்திட்டம் 2029-30-ம் நிதியாண்டுக்குள் மொத்தம் 20,773.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 40 சதவீத மத்திய நிதியுதவியுடன் 8,309.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மார்ச் 2025-க்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான டிரான்ஸ்மிஷன் லைன் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் வழியாக ஹரியானாவில் உள்ள கைதால் வரை செல்லும். அங்கு அது தேசிய கட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும். அதேசமயம், லடாக்கிற்கு நம்பகமான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக, லேயில் உள்ள திட்டத்தில் இருந்து தற்போதுள்ள லடாக் கட்டத்திற்கு ஒரு இடை இணைப்பும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இது ஜம்மு காஷ்மீருக்கு மின்சாரம் வழங்க லே-அலுஸ்டெங்-ஸ்ரீநகர் வழித்தடத்துடன் இணைக்கப்படும். இத்திட்டமானது பாங் (லடாக்) மற்றும் கைத்தால் (ஹரியானா) ஆகிய இடங்களில் தலா 713 கி.மீ. டிரான்ஸ்மிஷன் லைன்களையும் (480 கி.மீ. எச்.வி.டி.சி. லைன் உட்பட) மற்றும் 5 ஜிகாவாட் திறன் கொண்ட எச்.வி.டி.சி. முனையமும் அமைக்கப்படும்.
இத்திட்டம் 2030-ம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருட்களிலிருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின்சாரத் திறனை அடையும் இலக்கை அடைய பங்களிக்கும். மேலும், இத்திட்டம் மின்சாரம் மற்றும் பிற தொடர்புடைய துறைகளில், குறிப்பாக லடாக் பிராந்தியத்தில் பெரிய நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்றார்.
இத்திட்டம், சராசரி கடல் மட்டத்திலிருந்து 4,700 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் -35 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சுற்றுப்புற வெப்பநிலை, குறைந்த காற்றின் அடர்த்தி மற்றும் மிகக் குறைந்த வளிமண்டல ஆக்ஸிஜன் அளவுகள் ஆகியவற்றில் டிரான்ஸ்மிஷன் லைன் அமைப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.