நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
லியோ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
பின்னர் பாதுகாப்பு காரணங்களால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் லியோ படத்தில் நடித்த நடன கலைஞர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து லியோ பட சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் பல்வேறு தடைகளை கடந்து லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
சென்னையில் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், அயல்நாடுகளிலும் டிக்கெட் காலியாகிவிட்டன. முன்பதிவு மட்டுமே பல கோடிகளை எட்டியுள்ள நிலையில், முதல் நாள் வசூல் மட்டும் பல கோடிகளை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மிகப்பெரிய திரையரங்கு வளாகங்களில் ஒன்றான மாயாஜாலில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. அதாவது 16 ஸ்கிரீன்களில் 80 காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த திரையங்ரங்கில் முதல் நாளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் லியோ படத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.