ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் அரசால் ஏமாற்றப்பட்டதாக ராஜஸ்தான் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா, பூண்டி மற்றும் ஜலவர் பகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த கோட்டாவுக்கு வந்தார். கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நட்டா, “ராஜஸ்தானில் தினமும் பெண்களுக்கு எதிராக 17 பலாத்கார சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
15,000-க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றச் சம்பவங்கள் தரவுப்படி, ராஜஸ்தான் மாநிலம் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகம் நடக்கும் இடத்தில் முதலிடத்தில் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு எதிரான துரோகங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், ராஜஸ்தான் மக்கள் ஆளும் ஊழல் காங்கிரஸ் கட்சியால் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இந்த ஊழல்வாதிகளை ஒழிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஊழல் காங்கிரஸ் அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் காணும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, ராஜஸ்தான் மக்கள் பா.ஜ.க.வை நோக்கித் தங்களது மனதை திருப்பி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஊழல், விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என காங்கிரஸ் அரசால் ராஜஸ்தான் மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியின்போது 19,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் ஏலம் விடப்பட்டது. ‘சிவப்பு டைரி’ குறித்த காங்கிரஸ் தலைவர்களின் அறிக்கைகள் அவர்களின் அவநம்பிக்கையை காட்டுகிறது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெரும் உற்சாகமான சூழல் நிலவுகிறது. வரும் தேர்தலில் கோட்டா மாவடத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும்” என்றார்.