திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தற்போது, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாகி உள்ளது.
திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 3 பேரும், கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த 5 பேரும் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 86 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காரணமாக காய்ச்சல், சுவாச பிரச்னை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகள் சுவாச பிரச்னையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகளே டெங்குகாய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் 463 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.