திமுக, ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைப்போம், வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை அமைப்போம், ஈரோடு வர்த்தக மையம் அமைப்போம், நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பவானிசாகர் சத்தியமங்கலம் பகுதியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர். பொதுமக்கள் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,
பூ சாகுபடிக்குப் பெயர்போன சத்தியமங்கலம் பகுதியில் 5000 ஏக்கரில் மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் விற்பனையாகிறது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 12 அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை தமிழர்களின் கட்டிடக்கலை பெருமையை பறைசாற்றும் விதமாக, இந்தியப் பொறியாளர்களின் முயற்சியில் உருவானது.
32 TMC கொள்ளளவு கொண்ட இந்த பவானிசாகர் அணை ஆசியாவின் மிக நீளமான மண் அணை என்ற பெருமைக்குரியது. மன்னர் காலிங்கராயர் உருவாக்கிய, உலக அளவில் மிகப் பழமையான பாசன வாய்க்காலான காலிங்கராயர் கால்வாய், பவானி, நொய்யல் நதிகளை இணைத்து, 740 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பெரும் வரமாக இருக்கிறது.
ஈரோட்டில் தேசிய மஞ்சள் வாரியம், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு, 37,838 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம், 3,14,575 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,66,883 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,02,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், 1,84,153 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின்… pic.twitter.com/ySfy9zPLDk
— K.Annamalai (@annamalai_k) October 18, 2023
மன்னர் காலிங்கராயர், பாசனத் தந்தை M.A.ஈஸ்வரன் மற்றும் பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு இந்த மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களின் பாசனத்தைப் பெருக்கியவர் என்ற பெருமை நமது மாண்புமிகு பாரதப் பிரதமரையே சாரும்.
2021ஆம் ஆண்டு கீழ் பவானி கால்வாய் திட்டத்தின் விரிவாக்கத்திற்கு 933 கோடி ரூபாய் ஒதுக்கினர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இந்தத் திட்டத்தினால் மேலும் 2.47 லட்ச ஏக்கர் விளைநிலங்கள் பாசன உதவி பெறும்.
விஸ்வகர்மா சமுதாய மக்கள் பயன் பெற, அவர்களது வாழ்வாதாரம் முன்னேற, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த விஸ்வகர்மா திட்டம். சாலையோர வியாபாரம் செய்யும் மக்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்கு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் சுவநிதி திட்டம்.
அதே போல் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்கு கொண்டுவந்த திட்டம் தான் விஸ்வகர்மா யோஜனா. திமுக போன்ற மக்கள் விரோத கட்சிகளின், குலத் தொழில் என்ற பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களில் 9000 கைவினைத் தொழில் முனைவோர்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடம் எங்கும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கொண்டு செல்கிறார். ஐநா சபையின் கூட்டத்தில், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்க காலப் பாடலின் பெருமையை எடுத்துக் கூறினார்.
மகாகவி பாரதியார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் டிசம்பர் மாதம் 11ஆம் தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவித்து, அவரது நினைவாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைத்தார்.
காசி மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பாக பழங்குடியின மொழிகள் 58 உட்பட 120-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு, ஈழத்தில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க 120 கோடி ரூபாய் செலவில் யாழ்ப்பாண கலாச்சார மையம், பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை, 2020ஆம் தேசியக் கல்விக் கொள்கையில் தமிழ் உட்பட மாநில மொழிகளில் மாணவர்கள் பாடம் கற்கவேண்டும் என்ற கொள்கை, தமிழ் உட்பட மாநில மொழிகளில் உயர் கல்வி, தமிழ் உட்பட மாநில மொழிகளில் நமது சட்டங்கள் மொழிபெயர்ப்பு, இவை அனைத்திற்கும் மேலாக இன்று தமிழர்களின் பெருமையான செங்கோல் இந்திய பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இவை தமிழுக்கும் தமிழர்களுக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிசெய்துள்ளவற்றில் சில.
மோடி ஹிந்தியை திணிக்கிறார் என்று சொல்வது மடத்தனம். மோடி நாடு முழுவதும் தமிழைத் திணிக்கிறார் என்று வேண்டுமானால் குற்றம் சாட்டலாம்.
ஈரோட்டில் தேசிய மஞ்சள் வாரியம், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு, 37,838 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம், 3,14,575 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,66,883 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,02,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், 1,84,153 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், 95,782 பேர் கிஸான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய், 4683 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, ஈரோடு மாவட்டத்துக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் வழங்கியிருக்கும் திட்டங்கள் ஏராளம்.
ஆனால் திமுக, ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைப்போம், வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை அமைப்போம், ஈரோடு வர்த்தக மையம் அமைப்போம், நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வரும் தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள்? பாரதப் பிரதமரின் நலத் திட்டங்கள் தொடர, குடும்ப ஊழல் கட்சிகளின் ஆதிக்கம் ஒழிய, வரும் பாராளுமன்ற தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்துவோம். தமிழகத்தில் இருந்து, 39 பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.