ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரின் நேற்யை ஆட்டம் சென்னையில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர். இதில் டெவோன் கான்வே 18 பந்துகளில் 20 ரன்களும், வில் யங் 64 பந்துகளில் 54 ரன்களும் அடித்து ஆட்டமிழனத்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரன் 41 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் 74 பந்துகளில் 68 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடி வந்த க்ளென் பிலிப்ஸ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 80 பந்துகளில் 71 ரன்களை எடுத்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்துள்ளது.
289 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து பந்துவீச்சில் சுருண்டது. ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் நியூசிலாந்து பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது நியூசிலாந்து அணி.