ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் 17-வது ஆட்டம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று இரண்டு மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி சிறப்பாக விளையாடி, பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்று, தற்போது புள்ளி பட்டியலில் 6 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அக்டோபர் 8-ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. அக்டோபர் 11-ஆம் தேதி நடந்த ஆப்கானிஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. அதேபோல் அக்டோபர் 14-ஆம் தேதி நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றிபெற்றது.
அதேபோல் பங்களாதேஷ் அணி இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களில், ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் அணி அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த ஆப்கானிஸ்தான் உடனான ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றது. இதேபோல், அக்டோபர் 10-ஆம் தேதி நடந்த இங்கிலாந்து உடனான போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தது. மேலும், அக்டோபர் 13-ஆம் தேதி நடந்த நியூசிலாந்துடனான போட்டியிலும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி மீண்டும் தோல்வியைத் தழுவியது.
உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி சிறப்பாக விளையாடி, பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் அசத்தலான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து நான்கு வெற்றிகளைப் பெறுவதோடு மட்டுமின்றி 8 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறும்.
இதே வேளையில் ஏற்கனவே இந்த தொடரில் மூன்று போட்டியில், இரண்டு தோல்வியைப் பெற்றுள்ள பங்களாதேஷ் அணி தங்களது அடுத்த வெற்றிக்காகப் போராடும். இதன் காரணமாக இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் இந்த போட்டியின் மீதான சுவாரசியமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.