இஸ்ரேல் போரில் வயதான தம்பதியை காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த 2 பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், இவர்களின் துணிச்சலை குறிப்பிட்டு “சூப்பர் உமன்” என்று இஸ்ரேல் தூதரகம் பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல்-காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான போர் 13-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இப்போரில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேரும், காஸா தரப்பில் 3,000 பேரும் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், இப்போரில் சிக்கி செய்வதறியாது திகைத்திருந்த வயதான தம்பதியை, 2 பெண்கள் காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த சபீதா, மீரா மோகனன் ஆகியோர், இஸ்ரேலில் உள்ள நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியை பராமரிக்கும் பணிக்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றனர். இருவரும் வயதான தம்பதியை பராமரித்து வந்த நிலையில், கடந்த 7-ம் தேதி திடீரென இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்கண்ட இருவரும் வீட்டின் அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, வயதான தம்பதியை அழைத்துக் கொண்டு, பாதாள அறைக்குள் பதுங்கிக் கொண்டனர். இந்த சூழலில், ஹமாஸ் தீவிரவாதிகள் வீட்டிற்குள் புகுந்து அனைத்துப் பொருட்களையும் சூறையாடினர். பாதாள அறையின் கதவையும் திறக்க முயன்றனர்.
ஆனாலும், திறக்க முடியாத அளவுக்கு 2 பெண்களும் சேர்ந்த, சுமார் 4 மணி நேரமாக கதவின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தாங்கள் தப்பித்ததோடு, வயதான தம்பதியையும் காப்பாற்றி இருக்கின்றனர். இதையறிந்த இங்குள்ள இஸ்ரேல் தூதரகம் 2 கேரளப் பெண்களின் துணிச்சலை குறிப்பிட்டு சூப்பர் உமன் என்று பாராட்டி இருக்கிறது.
மேலும், தாக்குதலில் இருந்து தப்பிய அனுபவம் குறித்து சபீதா பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் சபீதா, “கடந்த 7-ம் தேதி காலை 6:30 மணிக்கு போர் தொடங்குவதற்கான அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே, வீட்டிலுள்ள அனைத்துக் கதவுகளையும் பூட்டிவிட்டு, நாங்கள் 4 பேரும் பாதுகாப்பான அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டிற்குள் நுழைந்த தீவிரவாதிகள், தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். அந்த சத்தத்தைக் கேட்டு பதற்றத்திலும், பயத்திலும் செய்வதறியாது நாங்கள் அதிர்ச்சியில் உறைந்தோம். இதனிடையே, பாதுகாப்பு அறையைத் திறக்கச் சொல்லி தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தொடர்ந்து துப்பாக்கியாலும் சுட்டனர்.
ஆனாலும், நானும், மீராவும் கதவை வெளியில் இருந்து திறக்க முடியாதபடி, கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டோம். சுமார் நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் அப்படியே நின்றிருந்தோம். மதியம் 1 மணியளவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டோம்.
வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் ஒரு பொருளும் மிஞ்சவில்லை. எங்கள் இருவரின் பாஸ்போர்ட் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்த பைகளையும் தீவிரவாதிகள் எடுத்துச் சென்று விட்டனர். இப்படியொரு கொடூர அனுபவத்தை இதுவரை நாங்கள் அனுபவித்ததே இல்லை” என்று கூறியிருக்கிறார்.