இஸ்ரேல் மீதான திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஸா, சூடான், துருக்கி, அல்ஜீரியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் செயல்படும் 10 ஹமாஸ் உறுப்பினர்கள் மற்றும் பாலஸ்தீனிய போராளி அமைப்பின் நிதி வலையமைப்புக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி காலை இஸ்ரேல் மீது அறிவிக்கப்படாத போரை அரங்கேற்றினர். இதில், 1,400-க்கும் மேற்பட்ட அப்பாவி இஸ்ரேலியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
போர் தொடங்கியபோதே இஸ்ரேலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று இஸ்ரேலுக்கு நேரில் சென்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்துப் பேசினார். மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்க் கப்பல்களை அனுப்பி இருக்கும் அமெரிக்கா, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் வழங்கி உதவி வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு நிதியுதவி செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அதன்படி, ஹமாஸ் முதலீட்டு போர்ட் ஃபோலியோவை நிர்வகிக்கும் உறுப்பினர்கள், ஈரானிய ஆட்சியுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட கத்தாரை தளமாகக் கொண்ட நிதி உதவியாளர், ஒரு முக்கிய ஹமாஸ் தளபதி மற்றும் காஸா அடிப்படையிலான மெய்நிகர் நாணய பரிமாற்றம் ஆகியவை தடைக்கு உள்ளாகி இருக்கின்றன.
இதுகுறித்து அமெரிக்கா கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் செயலாளர் ஜேனட் யெல்லென் கூறுகையில், “குழந்தைகள் உட்பட இஸ்ரேலிய குடிமக்களை கொடூரமான மற்றும் மனசாட்சியின்றி படுகொலை செய்ததைத் தொடர்ந்து, ஹமாஸின் நிதியாளர்கள் மற்றும் உதவியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்க கருவூலமானது தீவிரவாத நிதியை சீர்குலைக்கும் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆகவே, ஹமாஸுக்கு எதிராக எங்களது கருவிகளைப் பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம்” என்றார்.
பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நிதிக்கான அமெரிக்க கருவூலத்தின் துணைச் செயலர் பிரையன் நெல்சன் டெலாய்ட் பணமோசடி எதிர்ப்பு மாநாட்டில் பேசுகையில், “விளைவுகளை அனுபவிக்க தயாராக இருங்கள். ஹமாஸின் தீவிரவாத நடவடிக்கைக்காக சர்வதேச அமைப்பு மூலம் பணம் பாய்வதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார். மேலும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் தனியார் துறைகளும் ஹமாஸ் மீது பொருளாதாரத் தடை விதிக்கும்படி அழைப்பு விடுத்தார்.
“ஹமாஸுக்கு நிதியுதவியை நிறுத்த விருப்பமுள்ள அனைத்து நாடுகளுடனும், நிதி நிறுவனங்களுடனும் நாங்கள் கூட்டு சேர விரும்புகிறோம். அதேசமயம், எந்தவொரு நிறுவனமும் அல்லது அதிகார வரம்பும் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.