பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணைத் தலைவர் மதுசூதனன் நேற்று கூறியதாவது: கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி ஆகியவற்றை நஷ்டத்தில் செய்ய வேண்டியுள்ளது. கால்நடைகளுக்கு வழங்கப்படும் சூப்பர் கலப்பு தீவனம் விலை, ஒரே ஆண்டில், 70 கிலோ கொண்ட ஒரு மூட்டை, ஆயிரத்து 480 ரூபாயிலிருந்து ஆயிரத்து 615 ரூபாயாகவும், பைபாஸ் கலப்பு தீவனம், ஒரு மூட்டை ஆயிரத்து 555 ரூபாயிலிருந்து, ஆயிரத்து 780 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது. மேலும், பருத்தி கொட்டை, 50 கிலோ மூட்டை, ஆயிரத்து 900 ரூபாயிலிருந்து, 2 ஆயிரத்து 250 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கால்நடை மருந்து விலை, 25 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. ஆவின் நிறுவனத்தை விட, தனியார் பால் நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்கின்றன. தற்போது ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், படிப்படியாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் விலையை, லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி கொடுத்தால் மட்டுமே, நஷ்டத்தைச் சமாளிக்க இயலும்.
ஒரு லிட்டர் பசும்பாலினை 45 ரூபாயாகவும், ஒரு லிட்டர் எருமைப்பாலை 54 ரூபாயாகவும் அறிவிக்க வேண்டும். தமிழக அரசு லிட்டருக்கு 1 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தது கண்துடைப்பு, ஊக்கத்தொகையாக 5 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில், இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று கூறினார்.