அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் இராஜகோபுரம் கும்பாபிஷேகம் நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இத்திருக்கோவில் கி.பி. 1558-ஆம் ஆண்டு விஜயநகர பேரரசர் காலகட்டத்தில் உருவானது. இத்திருத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா முதல் ஒவ்வொரு விழாக்களின் போதும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.
120 அடி உயரம் கொண்ட, 628 சிற்பங்களைக் கொண்ட ராஜகோபுரத்தை ரூபாய் 2 கோடி திட்ட மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி 2022 மார்ச் 13-ஆம் தொடங்கியது. சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட கலவைகள் அடைக்கப்பட்டு பழங்கால முறைப்படி கோவில் திருப்பணி நடைபெற்றது.
கோபுர உச்சியில் 7 கலசங்கள் உள்ளன. அதன் உயரம் தலா ஆறே கால் அடியாக உள்ளது. திருப்பணிகள் முடிந்த நிலையில், வருகிற நவம்பர் 23-ஆம் தேதி காலை 9.15 மணி முதல் 10.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.