அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஹோபோகென் நகர மேயராக இருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மேயர் இரவிந்தர் எஸ் பல்லா பதவியை இராஜினாமா செய்யவிட்டால், அவரையும், அவரது குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக, மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.
நியூஜெர்சியில் உள்ள ஹோபோகென் நகர மேயராக, கடந்த 2017-ஆம் இரவிந்தர் எஸ் பல்லா வெற்றி பெற்றார். இதன் மூலம், அந்த நகரின் முதல் சீக்கிய மேயர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, கடந்த 2019-ஆம் ஆண்டு மேயர் இரவிந்தர் எஸ் பல்லா-விற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், மின்னஞ்சல் மூலம் அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இரவிந்தர் எஸ் பல்லா கூறியதாவது, “மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வருகிறது. முதலில் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறினர். பின்னர், என்னையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் கொல்லப்போவதாகக் கூறினர்.
மூன்றாவது முறையாக வந்த மின்னஞ்சலில், இது தான் கடைசி எச்சரிக்கை, உடனடியாக பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு மிரட்டலில் கொலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறினார்.