பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு, மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக இருந்ததை, 21 ஆக உயர்த்த, நிதி ஆயோக் சார்பில் அமைக்கப்பட்ட குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதை அடுத்து, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘குழந்தைத் திருமண தடுப்பு மசோதா 2021’ தாக்கல் செய்யப்பட்டது.
இது கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலைக்குழு, மாநிலங்களவையின் கீழ் செயல்படுகிறது. இந்த மசோதா குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய நிலைக் குழுவுக்கு ஏற்கனவே பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 2024-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.