இந்தியாவில் உள்ள ஆயிரம் பன்னாட்டு நிறுவனங்கள், தங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வழங்கிய சம்பளத்திற்கு, உரிய ஜி.எஸ்.டி.-யை செலுத்துமாறு, அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட அலவன்ஸ்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும்.
இதன் அடிப்படையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கான, ஜி.எஸ்.டி.-யாக ஒரு கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை அந்நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு 30 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்குமாறு ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது, “ இந்தியாவிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் துணை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு, தலைமை நிறுவனங்களால் கொடுக்கப்படும் சம்பளம் ஜி.எஸ்.டி. வரிக்கு உட்பட்டதாகும்.
வெளிநாட்டு நிறுவனத்தால், வெளிநாட்டவருக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள், இந்திய நிறுவனத்தால் வெளிநாட்டு நிறுவனத்திற்குப் பின்னர் திருப்பிச் செலுத்தப்படுகிறது.
எனவே இதற்கு ஜி.எஸ்.டி. விதிமுறையின் கீழ், வரி விதிக்கப்பட வேண்டும் என ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கருதுகின்றனர். எனினும், இந்திய நிறுவனத்தால் நேரடியாக ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டு, திருப்பிச் செலுத்தப்படாவிட்டால், அது ஜி.எஸ்.டி. வரிக்கு உட்படாது.
இதில் வெளிநாட்டவர்கள் இந்திய நிறுவனத்தின் ஊழியர்களாக மட்டுமே கருதப்படுவர். இது குறித்த நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்க நிறுவனங்களுக்கு, 30 நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.