வரும் ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய உற்பத்தித் தொழிலாக எலெக்ட்ரானிக்ஸ் மாறும் என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறினார்.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஆகியவை தகவல் தொழில்நுட்ப வன்பொருளை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கான ஆன்லைன் இறக்குமதி மேலாண்மை அமைப்பைத் தொடங்கி இருக்கின்றன.
ஆன்லைன் போர்ட்டல் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், “மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் ஆகியவை இறக்குமதி மேலாண்மை அமைப்பின் கீழ் இருக்கும். இறக்குமதி அங்கீகாரங்கள் 2024 நவம்பர் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும்” என்றார்.
மேலும், பொருளாதாரத்தில் எலெக்ட்ரானிக்ஸ் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த கிருஷ்ணன், “வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரானிக்ஸ் உலகின் மிகப்பெரிய உற்பத்தித் தொழிலாக மாறும். ஆன்லைன் இறக்குமதி மேலாண்மை அமைப்பு நம்பகமான டிஜிட்டல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொழில்துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னிலையில் இருக்க உதவுகிறது. இந்த போர்டல் நம்பகமான விநியோகச் சங்கிலியை செயல்படுத்துகிறது. மேலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறது. தவிர, சைபர் ஸ்பேஸை எந்த அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கும்” என்றார்.