போலி பிறப்புச் சான்றிதழ் வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம்கான், தன்னுடைய மகன் அப்துல்லா அசம்-க்கு போலியாக பிறப்பு சான்றிதழ் பெற்றதாக புகார் எழுந்தது. இதற்கு அசம்கான் மனைவி தசீம் பாத்திமா உதவியதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ் சக்சேனா ராம்பூரின் கஞ்ச் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ராம்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், “இராம்பூர் நகராட்சி அளித்த பிறப்புச் சான்றிதழில், அப்துல்லா அசமின் பிறந்த தேதி, 1993 ஜனவரி 1 எனவும், லக்னோ நகராட்சி அளித்த பிறப்பு சான்றிதழில் 1990 செப்டம்பர் 30 எனவும் உள்ளது. அசம்கான், தசீம் பாத்திமா அளித்த உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் இராம்பூரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அசம்கான், அவரது மனைவி தசீம் பாத்திமா, மகன் அப்துல்லா அசம் ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி ஷோபித் பன்சால் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து மூவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
உ.பி.யில் அசம் கான் மீது நில அபகரிப்பு, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனைவி, மகன் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அசம் கானும், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் அடிப்படையில் அப்துல்லா அசமும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.