அமெரிக்காவின் ‘ஸ்டான்போர்ட் ‘ பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள்’ பட்டியலில், பாலக்காடு ஐஐடி-யின் ஐந்து பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உலகளவில் முதல் இரண்டு சதவீத ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியல், அவர்களின் ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் இரண்டு பிரிவுகள் உள்ளன. விஞ்ஞானிகளின், 2022 வரையிலான செயல்களை மதிப்பிடும் ஒரு பிரிவும், 2022 ஆண்டின் செயல்களை மட்டும் மதிப்பிடும் இன்னொரு பிரிவும் உள்ளது.
அந்தவகையில், இந்த இரண்டு பிரிவுகளின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் உள்ள, ஐ.ஐ.டி.-யில் பணியாற்றும் ஐந்து பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில், முதல் பிரிவில் பாலக்காடு ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் சேஷாத்திரி சேகர், உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ்பேரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரண்டாவது பிரிவிலும் ஜகதீஷ்பேரி இடம் பிடித்துள்ளார்.
இரண்டாவது பிரிவில், வேதியியல் பிரிவு பேராசிரியர் முனைவர். யுகேந்தர் கவுட் கோத்தகிரி, வேதியியல் மற்றும் உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் முனைவர். அப்துல் ரஷீத், மின் பொறியியல் பிரிவு இணைப்பேராசிரியர் சபரிமலை மணிகண்டன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.