தமிழக அரசைக் கண்டித்து, வரும் நவம்பர் 9-ஆம் தேதி, லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் பொது குழுக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் தலைவர் தனராஜ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு சம்மேளனத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆன்லைனில் அபராதம் விதிப்பது, காலாண்டு வரி உயர்வு எங்களை மிகவும் பாதித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற, 125 சங்கங்களும் லாரி தொழிலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளன.
கடந்த வாரம், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம், காலாண்டு வரி உயர்வை இரத்து செய்ய கோரிக்கை விடுத்தோம். முதல்வரிடம் பேசி பதில் தருவதாகக் கூறினார். ஆனால், இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.
எனவே, வரி உயர்வு எதிர்ப்பை பதிவு செய்ய பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளோம். காலவரையற்ற வேலை நிறுத்தத்தைச் செய்வதற்கு முன், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். அதன்படி நவம்பர் 9-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடக்கும். வெளிமாநில லாரிகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படும். தமிழகத்தில், 6.5 இலட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்.
இதனால், சரக்கு தேக்கமடைவது மட்டுமின்றி அரசுக்கு, 30 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். மேலும், 20 இலட்சம் சிறிய ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்வோம். வரி உயர்வை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுவது சரியல்ல. தமிழகத்தில் காலாண்டு வரி, 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் டீசல் விலை குறைவாக உள்ளது என்று கூறினார்.