தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வருகிறது தமிழகக் காவல்துறை. இந்தியாவில் 5-வது மிகப் பெரிய காவல்துறையாக தமிழகக் காவல்துறை உள்ளது.
தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு எனகாவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, திருப்பூர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் தலைமையில் இயங்குகின்றது. அதே போல, தமிழகத்தில் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இயங்குகிறது.
காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர், துணைக் காவல் ஆய்வாளர், உதவியாளர் மற்றும் காவலர்கள் பணிபுரிகிறார்கள். மேலும், காவல்துறையில் குற்றப்பிரிவு, அனைத்து மகளீர் காவல் என பல்வேறு பிரிவுகள் உள்ளன.
ஆக மொத்தம், தமிழகக் காவல்துறையில் 1,21,215 பேர் சட்டம்- ஒழுங்கு காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இரவு – பகலாக பணிபுரிகிறார்கள்.
இப்படி பெருமை வாய்ந்த காவல்துறை தமிழக முதலமைச்சர் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த 12 வருடங்களாகப் பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள் என்பது தான் கொடுமையான விசயம்.
அதுவும், முதலமைச்சர் கட்டுப்பாட்டின்கீழ் வரும் துறையில் கடந்த 12 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் தூங்கி வழிவது மிகவும் வேதனையான விசயம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில், பல்வேறு துறைகளில் தினசரி ஆய்வு நடத்தும் முதலமைச்சர், தனது துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறையில், தனது கும்பத்தை மறந்து இரவு -பகலாக பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்களுக்கு உரிய பதவி உயர்வை எப்போது வழங்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.