நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1990-களில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயப்பிரதா. இவரக்கு சொந்தமான திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. தொகையைச் செலுத்தவில்லை எனத் தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தில் புகார் அளித்தனர்.
இதனால், அரசு காப்பீட்டுக் கழகத்தின் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், 5 ரூபாய் அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா சார்பில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. இதனால், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நடிகை ஜெயப்பிரதா சரணடைய வேண்டும், அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்த வேண்டிய ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும், அப்படிச் செய்தால் மட்டுமே சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து நிபந்தனை ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.