மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையகங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டு உள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
பொது மக்கள் சுகாதாரம் மற்றும் உடல்நிலை மேம்பாடு ஆகியவற்றுக்காக, நாடு முழுவதும் குறிப்பிட்ட ஒரு சில மருந்துகள் தவிர அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகளும் தரமாக உள்ளதா அல்லது போலியாக விற்பனை செய்யப்படுகிறதா என மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டால் அதன்பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் காய்ச்சல், சளி, வைட்டமின் குறைபாடு, கிருமித் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி உள்ளிட்ட 1,188 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 62 மருந்துகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மருந்து மற்றும் மாத்திரைகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில், பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.